அற்புதத் தலம் தில்லையாடி:
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பவன் இறைவன். அவனது நிறைவினை ஆன்மாக்களாகிய நாம் எளிதில் உணர முடிவதில்லை. அதனால் இறைவன் தனது கருணைப் பெருக்கால் தானே பல இடங்களில் மிக்குத் தோன்றி விளங்குகின்றான். அவ்வாறு அவன் தோன்றி விளங்கும் இடங்களே “தலங்கள்’ எனப் பெற்றன.
அருள்சக்தி தேங்கியிருக்கும் இடத்தை முதலில் கண்டவர்கள் சித்தர்கள், முனிவர்கள் ஆவர். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவரும் தில்லைவனத்தில் நிகழும் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து உலக மக்கள் அனைவருக்கும் அக்கூத்து பயன்படும்படி செய்தார்கள். தலங்களால் முனிவர்கட்கும், முனிவர்களால் தலங்களுக் கும் விளக்கம் உண்டாகியது. சிறந்த தலங்களி லெல்லாம் இன்றும் சித்தர்கள் தவம்செய்து கொண்டிருப்பதாக சமய நூல்கள் கூறுகின்றன.
அந்த வரிசையில் இளங்கார முனிவர் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்ற பெருமை வாய்ந்ததும், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருமால், சனி, இந்திரன் முதலானோர் வழிபட்டு பேறு பெற்றதும், சோழ மன்னர்கள் மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர், பிற மன்னர்களும் கி.பி. 7, 8-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்ததுமான அற்புதத் தலம்தான் தில்லையாடி.
இறைவன்: சார்ந்தாரைக் காத்தநாதர், சரணாகத ரட்சகர்.
இறைவி: பெரியநாயகி அம்பாள்.
தல விருட்சம்: வில்வமரம், வன்னிமரம்.
தீர்த்தம்: சக்கரதீர்த்தம்.
திருமால் வழிபட்டது முராரியான திருமால் முன்னொரு காலத்தில் இரண்யாசுரன் என்றஅசுரனைக் கொன்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசனிடம் சக்ராயுதத்தைப் பெற்று, திருக்கடவூர் அருகிலுள்ள தில்லைவனமான தில்லையாடியைச் சார்ந்தார். தன் சக்ராயுதத்தால் இங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, புனல், மலராதி கொண்டு சார்ந்தாரைக் காத்தநாதரை யாளி (குதிரை) வடிவில் அர்ச்சித்து வழிபடலானார். சிவபெருமான் அவர்முன் தோன்றி அவருக்குண்டான வீரஹத்தி தோஷத்தை நீக்கியருளினார். திருமால் உருவாக்கிய தீர்த்தம் சக்கரதீர்த்தம் என்றாயிற்று. தில்லைவனம் என்பது தில்லையாளி என்றானது.
தேவேந்திரன் தில்லைவனநாதரை வணங்கி, “தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது. தில்லைவனம், வள்ளியம்மை நகர், தில்லையாளி என்ற பெயர்கள் இருந்தாலும் தற்போது நடைமுறையில் தில்லையாடி என்றே விளங்கப் பெறுகிறது.
சனி பகவான் பூஜித்தது
நவநாயகர்களில் நீதி தவறாத நீதிபதியாக தன் கடமையைச் செய்பவர் சனி பகவான். தன் கடமையைச் செய்கின்ற சனி பகவானுக்கு அபவாதப் பெயர் தான் வருகிறது. இந்த அபவாதப் பெயர் நீங்கவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான், தில்லையாடிக்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி எண்ணற்ற நாட்கள் தவங்கிடந்தார். எம்பெருமானும் சனி பகவானின் அன்பிற்கு எளியராகி, “தன்னை சரணடைந்த அடியார்கட்கு வேண்டுவனவெல்லாம் நல்கும் திறனை’ சனி பகவானுக்கு அருளினார்.
இளங்கார முனிவர் வழிபட்டது
சோழமன்னன் ஆட்சிக்காலத்தில், இளங்காரர் என்பவர் நம்பிக்கைக்குரிய அமைச்சராக பணி யாற்றி வந்தார். சோழமன்னன் திருக்கடையூர் சிவாலயத்தை புதுப்பிக்க எண்ணி, தன் அமைச்சரை திருக்கடையூரிலே இருக்கச் செய்து, பெரும் பொருள் அனுப்பி திருப்பணிகள் பலவும் செய்ய ஆக்ஞாபித்தான். காலை முதல் மாலை வரை திருப்பணிகள் செய்வதைப் பார்வையிட்டு, இரவு தில்லைவனத்திலே தங்கிவிடுவது அமைச்சரின் வழக்கம். அச்சமயம் அவருக்கு இனம் புரியாத உடல்வலி இருந்துகொண்டே இருந்தது. இந்த வலி நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வுடன் அவரது பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தார். மருத்துவம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஒருநாள் பணிக்குப் புறப் பட்டபோது மிகுந்த அசதி உண்டாயிற்று. அப்போது, வில்வ மரங்களுக்கிடையே ஒரு லிங்கம் இருப்பதைக் கண்டு, அவரை வழிபட்டு சக்கர தீர்த்தத்தில் நீராடினார்.
அதன்பின்னர் பழையன கழிந்து உடலில் புதிய ரத்தம் செலுத்தியதுபோல் புத்துணர்வு பெற்றார். ஈசனை வணங்கிவிட்டு அவரது பணிக்குச் சென்றார்.
உடல்வலியோடு தவித்த தன்னை உடல் வலிமையோடு உலாவரச் செய்த ஈசனுக்கு கோவில் எழுப்பினால் என்ன என்று சிந்தித்தார் அமைச்சர். மன்னன் தான் எவ்வளவு பணம், பொருள் கேட்டாலும் கொடுக்கிறாரே, அரசனுக்குத் தெரியாமல் இங்கு கோவில் கட்ட பயன்படுத்துவோம் என்று முடிவுசெய்து, திருக்கடையூரிலிருந்து தில்லையாடிக்கு சுரங்கப்பாதை அமைத்து, தில்லையாடி ஈசனுக்கு கோவில் கட்டினார்.
திருக்கடையூரிலும் தில்லையாடியிலும் ஒரே சமயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்றன. ஒரே நாள் ஒரே நேரத்தில் இரு கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கு இரு தினங்களுக்குமுன் அரசரின் கனவில் ஈசன் தோன்றி, “எனது பக்தன் வில்வ வனமான தில்லை வனத்திலே ஆலயம் எழுப்பியுள்ளான். கும்பாபிஷேக நேரத்தில் அங்கும், தீபாராதனை காட்டும் நேரத்தில் திருக்கடையூரிலும் காட்சி தருவேன்’ என்றார். உறக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த மன்னர் பொழுது விடிந்ததும் தில்லைவனத்திற்குச் சென்றான்.
அங்குள்ள மக்கள் அமைச்சர் இளங் காரரைக் காட்டி, “இவர்தான் கோவில் கட்டினார்’ என்று மன்னனிடம் கூறினர். “இவர் உண்ணும் உணவே எனது பணமாயிற்றே. இவர் எப்படி கோவில் கட்டினார்’ என்று யோசித்த மன்னனுக்கு அப்பொழுதுதான் தெரியவந்தது- ஒரு கோவில் திருப்பணி செலவில் கணக்குகள் காண்பித்து இரு கோவில்களைக் கட்டியுள்ளார் என்று. ஒருபுறம் கோபம், மறுபுறம் வெகுநேர்த்தியாக அனைத்து அம்சங்களும் அழகுற வடிவமைத்த சந்தோஷம். பிறகு மன்னன், “”எனது மூலதனத்தை வைத்து எனக்குத் தெரியாமல் கோவில் கட்டினீர். பரவாயில்லை; அந்தப் புண்ணியத்தை எனக்கு தந்துவிடும்” என்றான்.
“”மன்னா, பணம் தங்களுடையதாய் இருக்கலாம். ஆனால் புண்ணியம் எனக்குத்தான்” என்றார்.
மன்னனுக்கு மேலும் கோபம் வந்தது. ஏவலர்களைப் பார்த்து, “”என் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கை, கால்களைச் சேதம் செய்க” என்று ஆணையிட்டான். ஏவலர்களும்அவ்வண்ணமே செய்தனர். அப்போது சிவபெருமான் அசரீரியாக, “”அமைச்சர் சிவப்பணி செய்து சிவாலயம் எடுப்பித்தார். அவர் செய்த பணியை நாம் ஏற்றோம்” என்றார். ஏவலர்கள் அமைச்சரின் கை, கால்களை சேதம் செய்தபோது மன்னனின் கண்பார்வை பறிபோனது. “”ஈசனே! எம்பெருமானே! இது என்ன சோதனை? இன்னும் 48 மணி நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமே” என்று புலம்பினான். அதற்கு அமைச்சர், “”நிருதிமூலையில் விநாயகரை நிறுவி வழிபடு; சரியாகிவிடும்” என்றார். அமைச்சர் கூறியதன் பேரில் நிருதி விநாயகரை சிறப்பு பூசனை செய்து மனதார வழிபட்டு மீண்டும் கண்பார்வை பெற்றான்.
பார்வை வந்ததும் இளங்காரருக்கு அம்மையப்பன் காட்சி தந்தார்.
இதைக் கண்டவுடன் தன் குற்றத்தினை உணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான் மன்னன். அமைச்சரின் வெட்டுண்ட கை, கால்கள் எம்பெருமான் அருளால் மீண்டும் ஒன்றுசேர்ந்தன. இதைக் கண்ணுற்ற அரசன் மனம் மகிழ்ந்தான்.
அதன்பின் அமைச்சரை இத்தலத் திலேயே இருக்கச் செய்து வேண்டுவனவெல்லாம் நல்கி, அரசன் தன் இருப்பிடம் சேர்ந்தான். இளங்கார முனிவர் என்ற திருப்பெயருடன் அவ்வமைச்சர் இத்தலத் திலேயே இருந்துவரலானார். மணிவாசகர் அருள் பெற்றுய்ந்தது போல் இளங்கார முனிவரும் சிவனருள் நிரம்பப் பெற்றார்.
அவர் ஒருசமயம் சிதம்பரம் பொற்சபை யில் ஸ்ரீநடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்தில் காணவேண்டும் என்று விரும்பினார். சிற்சபாநாதனும் “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ என்ற திருவாக்கின்படி, இளங்கார முனிவரின் விருப்பின் வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீநடராஜர் நடனமாடினார். இளங்கார முனிவரும் அந்த நடனத்தைக் கண்டு பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்தார். நாள்தோறும் அந்த ஞான நடனத்தைக் கண்டுவரலானார். இவ்வண்ணமே இருந்து இளங்கார முனிவர் குஞ்சிதசரணத்தில் இரண்டறக் கலந்தார் என்று தலபுராணம் கூறுகிறது.
இவ்வரலாற்றினால் இத்தல இறைவனுக்கு ஸ்ரீசார்ந்தாரைக் காத்த சுவாமி என்ற திருநாமம் வழங்கலாயிற்று. 1915-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தில்லையாடிக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு
கோவிலின் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளோடு அறுபதடி உயரத்தில் வானளாவி விளங்கு கின்றது. அதன் கீழ் இளங்கார முனிவர் ஈசனைவணங்குவதுபோன்ற சிற்பம் காணப்படு கின்றது. அடுத்து இடதுபுறம், கருவறையில் மூலவரான ஸ்ரீசார்ந்தாரைக் காத்த சுவாமி காட்சி அளிக்கிறார். மூலவருக்கு வலப்புறம் சுரங்கப்பாதை உள்ளது. நிருதிமூலையில் சோழ மன்னனுக்கு கண்ணொளி தந்த நேத்ர விநாயகர் கஜப் பிருஷ்ட விமானத்தின்கீழ் சோழ விநாயகர் என்ற திருநாமத்துடன்அருள்புரிகிறார். பொதுவாக சுவாமி சந்நிதி தான் கஜப்பிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கும். இங்கோ சுவாமி இந்திர விமானத்துடனும், சோழ விநாயகர் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி போல் அமைப்பு) விமானத்துடன் இருப்பது தனிச்சிறப்பு. சுப்ரமணியர் ஆலயம் தனியாக உள்ளது. சனிபகவான் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அதற்கு பின்புறம் சூரியனும், பைரவரும் மேற்கு நோக்கி அருள்புரிகிறார் கள். திருநள்ளாறில் உள்ளது போல் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் மத்தியில் தனிச்சந்நிதியுடன் சனி அருள் புரிகிறார். இதன் இடதுபுறம் வில்வமரம், வலது புறம் வன்னிமரம் உள்ளது. கொடிமரத்தில் திருமால் யாளி வடிவில் ஈசனை வணங்குவதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கிய அம்பிகை ஸ்ரீபெரியநாயகி ஆனந்தமாய், அறிவாய், அமுதாய் இன்பம் தரும் நிலையில் அருள்புரிகிறாள். ஆடிப்பூர நாளில் வளையல் அணிவிப்பு நிகழ்ச்சியில் மணப்பேறு, மக்கட்பேறு கிடைக்க அருள்புரிவாள். அம்பாளுக்கு தனிச்சுற்றுடன் கூடிய தனிச்சந்நிதி உள்ளது. வெளி மகா மண்டபத்தில் கோஷ்டத்தில் ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.
“நிறைந்த ஆயுளுடன் வாழ திருக்கடையூர்; பூரண ஆரோக்யத்துடன் வாழ தில்லையாடி; அண்ணன் எமதர்மனுக்கு காட்சி தந்தது திருக்கடையூரில்; தம்பி சனி பகவானுக்கு காட்சி தந்தது தில்லையாடியில்’ என்று இறையன்புடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர். சரணா கதரட்சகராம் ஸ்ரீசார்ந்தாரைக் காத்த நாதர் உடனுறை ஸ்ரீ பெரியநாயகி அம்பாள், அனுக்கிரக சனீஸ்வரரை ஒருசேர தரிசிப்போம். ஒளிமயமாய் வாழ்வோம். ஓம் நமச்சிவாய!
ஆலய தொடர்புக்கு: கல்யாண சுந்தர சிவாச்சாரியார் செல்: 96007 68379.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திலுள்ள திருக்கடையூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில், திருவிடைக் கழி செல்லும் வழியில் உள்ளது தில்லையாடி.
No comments:
Post a Comment