பௌர்ணமி தினம் அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தது என்றால், கார்த்திகைப் பௌர்ணமி சிவ வழிபாட்டுக்கு உகந்த திருநாள். அது அண்ணாமலையில் புகழ்பெற்ற பெருநாள்!
படைப்புக் கடவுளான பிரம்மதேவனுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்குமிடையே “நானே உயர்ந்தவன்’ என்ற பூசல் வந்தபோது, சிவபெருமான் நெடுஞ்ஜோதியாகத் தோன்றி அவர்களின் ஆணவ நிலையகற்றி உண்மையைக் காட்டியருளினார். பின்னர் மலையாக மாறினார். இந்த சம்பவம் கார்த்திகைப் பௌர்ணமியில்தான் நிகழ்ந்தது.
முக்தியடைவது பற்றி ஒரு சிவத்துதி உண்டு.
“தில்லையில் காண- காசியில் இறக்க-சிறக்கும் ஆரூர்தனில் பிறக்க-எல்லையில் பெருமை அருணையை நினைக்கஎய்தலாம் முக்தியென்று நடித்தீர்.’
திருவாரூரில் பிறந்தால் முக்தி கிட்டும்; ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமில்லை. காசியில் இறந்தால் முக்தி; அதுவும் எல்லாருக்கும் இயலாத ஒன்றே. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி; அது முயன்றால் அடையக்கூடியதுதான் என்றாலும், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு எளிதாகாதே. ஆனால் “அருணாசல’ என்று நினைத்தாலே முக்தியாம். ஏழை- பணக்காரன், உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என யார் வேண்டுமானா லும் எங்கிருந்தும்நினைக்கலாம். அதுதான் அருணாசல தல மகிமை!
“நமசிவாய’ என்பது சிவ பஞ்சாட்சரம். “அருணாசல’ என்பதும் சிவ பஞ்சாட்சரமே. ஒருமுறை “அருணாசல’ என்று சொன்னால் ஒரு கோடி “அருணாசல’ நாமம் சொன்னதற்குச் சமம்.
அருணாசல மலையை சிவசக்தி மலை என்பர். அம்பிகை காஞ்சியில் காமாட்சியாய் எழுந்தருளி, மண்ணால் லிங்கம் அமைத்து வழிபட்டு சிவனுடன் ஒன்றிணையும் வரம்வேண்டினாள்.
சிவனோ, “அண்ணாமலையில் உன் தவம் தொடரட்டும்’ என்றார். அதன்படி தேவி தவம்புரிந்து, ஈசனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீஸ்வரியானாள். ஆணும் பெண்ணும் சரிநிகரானவர்கள் என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய தலம் அண்ணாமலை.
நவராத்திரி தேவியான துர்க்கா மகிஷாசுரனை அழிக்கப் பிறந்தவள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரது சக்திகள் ஒன்றிணைந்து உருவான இவள் அண்ணாமலையை வழிபட்டு மேலும் பலம் பெற்றாளாம். மகிஷாசுரமர்தினி கோவிலையும் திருவண்ணாமலையில் தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment