தோணிபுரீஸ்வரர் ஆலயம்
தென்பாண்டி நாட்டின் தெற்குப்பகுதியிலிருக்கும் திருநெல்வேலி பதியின் அருமை பெருமையினை அளவிட முடியாது. “திக்கெல் லாம் புகழுறும் திருநெல்வேலிச் சீமை’ என்பது திருஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கு.
அத்தகைய திருநெல்வேலிச் சீமையின் வடக்கே அமைந்த அழகிய நதி, நிட்சேப நதியாகும்.
“அந்த நதிதன்னில் மன விருப்போடு சித்திரை விசுவாம் அத்தினத்தில் வந்து படிந்தவர் சாயுச்சியம் பெறுவார் ஐயமில்லை- வழுத்தற் கொண்ணா நிந்தையுறும் பாதகர் காணினும் புனிதராவர் எனில் நிகழ்த்தும் அந்தச்சுந்தர நிட்சேப நதிப்புனல் படிந்தோர் பெறும்பேறு சொல்லுவ தென்னே’
என்றவாறு, நிட்சேப நதியின் பெருமையை, சங்கப்புலவர் மரபில் உதித்த ச. திருமலைவேற் கவிராயர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அத்தகைய நதியின் தென்பகுதியில் கலிங்கப் பட்டி மரத்தோணி ஸ்ரீ அகிலாண்டஸ்வரி சமேத தோணிபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள் ளது.
மரத்தோணி
முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் போரில் வெற்றிபெற்று தனது படைகளுடன் திரும்பும்பொழுது, ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதைக்கண்ட மன்னன், தனது நாட்டிற்கு “அனைவருடனும் அகமகிழத் திரும்பவேண்டும்’ என்று ஈசனிடம் முறையிட, ஆற்றங்கரையில் நின்ற வானுயர்ந்த மரம் வேருடன் சாய்ந்து, அக்கரைக்குச் செல்ல தோணிபோல் உதவியதால், இவ்வூருக்கு மரத்தோணி என்று பெயர் வந்தது என்று கூறுகிறார்கள்.
மற்றுமொரு காரணம்
சென்ற நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்களில் தனித்து விளங்கிய இ.மு. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் “நெல்லை மாவட்ட கோவில் வரலாறு’ என்னும் நூலில், “ஸ்ரீராமபிரானும் சீதையும் லட்சுமணனும் இப்பகுதிக்கு வரும்போது, நிட்சேப நதி வெள்ளம் கரைபுரண்டு வர, ஆற்றைக் கடக்க தென்பகுதியிலுள்ள வேப்பமரம் தோணிபோல் வளைந்துகொடுத்த காரணத்தால் மரத்தோணி என்று பெயர் வந்தது’ என்று பதிவுசெய்துள்ளார். எப்படியிருப்பினும், ஆன்மாக்களை பிறவியெனும் பெருங்கடலிலிருந்து கரையேற்றுவது ஈசனின் கடன். இத்தத்துவத்தை உணர்த்த மரத்தோணி கிராமத்தில் சிவபெருமான் கோவில்கொண்டு திருவருள் செய்கிறார் என்பது பொருத்தமான செயல்தானே.
திருவொற்றியூரானும் திருத்தோணிபுரத்தானும்
தேவார மூவராலும் பாடல்பெற்ற திருத்தலம்- திருஞானசம்பந்த சுவாமிகள் அவதாரம் செய்த அற்புதத் தலம்- பிரம்மாவுடன் தேவர்களும், நவகோள்களும் வந்து வழிபாடு செய்த திருத்தலம் சோழநாட்டு வடகரைத் தலங்களில் ஒன்றான சீர்காழி. இதற்கு பன்னிரண்டு பெயர்கள் உண்டென்று சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார்.
பிரளய காலத்தில் சிவபெருமான், உமை அன்னையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டுவந்து, உயிர்கள் உய்யும் வண்ணம் சீர்காழித் தலத்தில் எழுந்தருளினார். எனவே, இத்தலத்திற்கு தோணிபுரம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு தோணியப்பர் என்பது சிறப் புத் திருநாமம் ஆகும்.
சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்ட சிறப்புடைய தலம்- திருவிளக்குப் பணியின்பொருட்டு தமது கழுத்தினையே அரிய முற்பட்ட கலியநாயனார் அவதாரத் தலம் சென் னைக்கு அருகிலுள்ள திரு வொற்றியூர். மாந்தாதா என்னும் மன்னன் தனது ஆயுளைக் குறைக்கும் பொருட்டு, நாட்டிலுள்ள சிவாலய பூஜை நிகழ்வுகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் அரசாணை வெளியிட்டான். அதில் அந்த மன்னன் அறியாவண்ணம், “திருவொற்றியூர் நீங்கலாக’ என்று இடைச்செருகலிட்ட எழுத்தறிநாதர் அருள்பாலிக்கும்அற்புத தலம். இங்கு தியாகராஜர் சந்நிதி சிறப்புடையது. வடிவுடைய அன்னை எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில் மகிழமரம் தலவிருட்சமாகும். பட்டினத்தார் ஆலயத்தினை தன்னகத்தே கொண்ட திருவொற்றியூரில், மூவர் முதலிகளின் தேவாரம் தேனாமிர்தமாகும். ஆளுடைய அரசராகிய ஸ்ரீ அப்பர் சுவாமிகள் நாம் உய்யும் பொருட்டு திருவொற்றியூர் கோமானிடம்,
“மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும்போது
மதமெனும் பாறை தாக்கி மறியும்போது அறிய வொண்ணா(து)
உனைஉனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே’
என்று பாடித் துதிசெய்கிறார்.
“மனமாகிய தோணியில் அறிவு எனப்படும் கோலை நாட்டி, சினம் எனப்படும் சரக்கை ஏற்றி உறவுகளுடன் செல்லும்போது, மதம் எனப்படும் தீவினை தாக்கி நிலைகுலைந்து இறுதிக்காலத்திற்கு செல்லுவது உறுதி. இதனையெல்லாம் அறியாத நான் என் உணர்விலே, உன்னை எப்போதும் உறுதியுடன் நினைத்து வாழ அருள் செய்வாய் திருஒற்றியூர் பெருமானே’ என்கிறார்.
மேற்கண்ட உயர்ந்த தத்துவங்களைக் கொண்டவர்தான் மரத்தோணி கிராமத்திலும் எழுந்தருளி திருவருள் நல்கும் தோணிபுரீஸ்வரர் பெருமான் ஆவார்.
இறைவன்
“துறையாருங் கடல் தோணிபுரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே’ என்பது ஆளுடைய பிள்ளையாரின் அருள்வாக்கு. மேலும், தோணிபுரீஸ்வரரின் பெருமையை தேவார மூவர் முதலிகளும் ஏனைய அருளாளர்களும் போற்றி மகிழ்கிறார்கள். தோணிபுரீஸ்வரர், தோணியப்பர் என்றழைக்கப்பெறும் சிவபெருமானின் லிங்கத் திருமேனி, இப்பகுதியில் பிரம்மாண்டமான திருமேனியாகும். தோணிபுரீஸ்வரரை தரிசனம் செய்யும்போது “தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவான் தத்துவன்’ என்னும் திருமொழி இங்கு மெய்யாகிறது. நம்முடைய வினைகள் யாவும் வீழ்த்தப்பெற்று நல்வழிதனை நலமுடன் காட்டியருளுகிறார் என்பதனை தரிசிப்போர்வழி உணரலாம்.
பிழைபொறுக்கும் பித்தனின் துணையாள் தமிழக பஞ்சபூதத் “தலங்களில் அப்புத்தல மாகத் திகழ்வதும்; “திருநீற்றான் மதில்’ என்னும் புராணச் சிறப்புகொண்ட மதில்சுவர் அமையப் பெற்றதும்; தேவார மூவராலும், ஐயடிகள் காடவர்கோனும், சைவஎல்லப்ப நாவலரும், கச்சியப்ப முனிவரும், அருணகிரிநாதர் மற்றும் காளமேகப் புலவர் போன்றோரால் பாடல்பெற்றதுமான திருவானைக்கா தலத்தில் திருவருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதே.
திருவாவடுதுறை ஆதீனப்புகழ் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு “அகிலாண்டநாயகி மாலை’ என்ற புகழாரம் ஒன்றைச் சூட்டியுள்ளார். அதில் மீனாட்சி சுந்தரம்பிள்ளை வினோதமான வேண்டுகோளை வைக்கிறார்.
“அகிலாண்ட நாயகி அன்னையே, உன் கணவனுக்கு யாரை எங்கு வைப்பதென்றே தெரியவில்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பித்தன் என்று உன் கணவனைப் பாடியது சரிதான்.
ஏனென்றால், நீ எத்தகைய குணம் உடையவள்! கங்காதேவி எத்தகைய குணம் உடையவள்? நீரில் யாரேனும் தவறி மூழ்கினால் மூன்று முறைமட்டுமே நீராகிய கங்காதேவி அப்பிழையைப் பொறுப்பாள். நீரும் முப்பிழை பொறுக்கும் என்பது பழமொழி. ஆனால் நல்வயல்கள் சூழ்ந்த திருவானைக்காவில் எழுந்தருளி நல்கும் நீயோ, உயிர்கள் செய்யும் பல்வேறு குற்றங் களைப் பொறுத்து அருள் செய்கின்றாயே. உனக்கு தனது உடம்பில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மூன்றுமுறை மட்டுமே பிழைபொறுக்கும் கங்காதேவியை தலையில் சூடிக்கொண்டாரே’ என்று துதி செய்கிறார்.
“அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
யணியுருப் பாதியில் வைத்துத்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவியன் மதியஞ்சூடிய பெருமான்
பித்தென்றொரு பெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு வானைக்
காவலகி லாண்டநாயகியே.’
அதுபோல மரத்தோணியில் உயிர்கள் செய்யும் எல்லா குற்றங்களையும் பொறுத்துக் காத்தருளும் அன்னை, அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனே திருவருள் பாலிக்கிறாள்.
அன்னை அகிலாண்டேஸ்வரி இரண்டு திருக்கரங்களுடன் குருபீட அம்சமாக தெற்குநோக்கி எப்போதும் மங்களம் நல்கும் திருக்காட்சி தருகிறாள்.
விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர் ஆகியோருடன் அருள் வழங்கும் மரத்தோணி திருக்கோவிலின் மூலக்கோவில் சிதைவுற்றபிறகு, இப்பகுதியில் குலசேகரப்பேரி என்னும் கிராமத்தில் வாழ்ந்த எ. லிங்கவநாயக்கர் என்னும் பெரியவர் புனர்நிர்மாணம் செய்து, 26-5-1969 அன்று குடமுழுக்கு வைபவத்தை நடத்தியுள்ளார்.
கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீ திருமுருகன் திருப்புகழ் சபை சார்பாக தொடர்ந்து பிரதோஷ வழிபாடு நடத்தப்பெற்று வருகிறது. “பிரதோஷ தரிசனத்திற்கு வரும் அன்பர்களின் வாழ்வில் மங்களங்களை நிறையச் செய்துள்ளார் ஸ்ரீதோணிபுரீஸ்வரர்’ என்று பெருமை பொங்கப் பேசி மகிழ்கிறார்கள் ஸ்ரீதிருமுருகன் திருப்புகழ் சபைக்குழுவினர்.
ஆலயத்துக்கு முன்மண்டபம் அமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்பது இவ்வூர் மக்களின் எதிர்பார்ப்பு. திருப்பணியில் பக்தர்கள் பங்குபெறலாம். தோணியப்பர் அதை நிறைவேற்றி வைப்பார்.
மரத்தோணி தோணிபுரீஸ்வரர் ஆலயத் திற்கு கலிங்கப்பட்டி, திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், சுப்புலாபுரம் வழியாக வந்தடையலாம். ஆட்டோ, மினிபஸ் வசதிகளும் உள்ளன.
ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் கரிவலம் வந்தநல்லூர் திருமுருகன் திருப்புகழ் சபை சார்பாக, மாலை 3.00 மணியளவில் வேன் மற்றும் ஆட்டோக்கள் மூலம் அன்பர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
பிரதோஷ தரிசனத் தொடர்புக்கு:
செ. சுப்பையா- 04636 260500,
பெ. சண்முகம், 99947 92058,
வே. கார்த்திகேயன்- 99434 96038.
——————————————————————————————
No comments:
Post a Comment