Wednesday, November 5, 2014

அண்ணாமலை ஈர்த்த யோகியர்

image.jpeg

அருணை என்றால் செம்மை. எனவே இது செந்நிறமலை. செம்மையான மலை. ஞானமலை. ஞானத் தபோதனர்களை- சித்தர்களை தன்பால் ஈர்க்கும் மலை இதுவென்பர். இங்குவந்துஅருள்பெற்றோர் பலர். அவர்களில் ஒருசிலரை சிந்திப்போமா?
 மாணிக்கவாசகர் “திருவெம்பாவை’ என்னும் தெய்வத்திரு நூலை இத்தலத்தில்தான் படைத்தார்.
 சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
 இவ்வாலய வள்ளால கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிர்விட முயன்றார் அருணகிரிநாதர். முருகப்பெருமான் அவரை தடுத்தாட் கொண்டார். முருகனை மையமாகக் கொண்டு அறுசமயக் கடவுள்களையும் ஒன்றிணைத்து “திருப்புகழ்’ பாடினார் அருணகிரியார். “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பதுபோல, “திருப்புகழைப் பாடார் ஒரு புகழும் அடையார்’ என்பர்.
 குகை நமச்சிவாயார் என்பவருக்கு “திருவண்ணாமலைக்கு வா’ என்று உத்தரவு கிடைத்தது. அவர் அண்ணாமலை வந்து அருள்பெற்றார். 
 உண்ணாமலை அம்மனிடம் உணவுகேட்டு, அவள் கையாலேயே பொங்கல் உணவு பெற்றவர் குரு நமச்சிவாயர். சிதம்பரம் கோவிலிலிருந்த திரைச்சீலையில் தீப்பிடித்தபோது, திருவண்ணாமலையிலிருந்தே தன் கைகளைப் பிசைந்து அணைத்தவர்.
 தன் 90 வயதுவரை அண்ணாமலையை நாள்தோறும் வலம்வந்து, அருணாசலரை தரிசிக்கும் பேறு பெற்றவர் சோணாசல தேவர்.
 ஊமையாய்ப் பிறந்து, அண்ணாமலையார் அருளால் பாடும் திறன் பெற்று, தில்லையிலே திளைத்து, திருவாரூரில் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
 திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்தவர் ஈசான்ய ஞானதேசிக சுவாமிகள். இருபுறம் புலி இருக்க, தவம் செய்தவர். அப்போதைய ஆங்கிலேய கலெக்டர் ஐடனின் கடும் நோயைத் தீர்த்தவர்.
 இங்குள்ள பாதாள லிங்கம் கரிகால்சோழன் காலத்தில் நிறுவப்பட்டதென்பர். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைத்தார். அந்தப் பணியின் போது இந்த பாதாள லிங்கத்தை அகற்றாமல் காத்தவர் ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.

 மதுரையிலிருந்த வேங்கடரமணனை “அருணாசல’ என்னும் சொல் ஈர்க்க, திருவண்ணா மலை வந்து, பாதாள லிங்கம் அருகே தவம் செய்து, சேஷாத்ரி சுவாமிகளால் காப்பாற்றப்பட்டு, 
பின்னர் பால் பிராண்டன் என்னும் ஆங்கிலேயரால் உலகமறியப் பெற்றவர் ரமண மகரிஷி. காஞ்சியில் பிறந்து, காமாட்சியின் அவதார மென்று கூறப்பட்டு, பைத்தியம்போல அலைந்து திரிந்து அண்ணாமலை வந்து, பக்தர்களுக்கு வினோதமாக அருளியவர் சேஷாத்ரி சுவாமிகள்.
 உண்ணாமல் உறங் காமல் 12 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து ஈசனின் அருள்பெற்றவர் ராதாபாய் அம்மையார்.
 திருநெல்வேலியில் பிறந்து, திருவருணையில் முருக தரிசனம் பெற்று, வண்ணமாகப் பல பாடல்களைப் பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
 1,008 முறை அண்ணா மலையை வலம்வந்தவர்- வலம் வரும்போது பல சித்தர்களும் யோகிகளும் சூட்சுமமாக தவம் செய்வதைக் கண்டவர் இசக்கி சுவாமிகள்.
 பூமிக்குள்ளிருந்த புதையலை ஞானக் கண்ணால் பார்த்து, அதைக்கொண்டு அரைகுறையாய் நின்ற அண்ணாமலை வடப் புற கோபுரத்தைக் கட்டிமுடித்தவர்அம்மணியம்மாள்.
 கங்கைக் கரையில் பிறந்து, பறவையை விரட்டுவதற்காக வீசிய கல் அந்தப் பறவை யைக் கொன்றுவிட்டதால் மனவேதனையடைந்து, மனசாந்தி வேண்டி பல தலங்கள், ஞானியரை தரிசித்து, இறுதியாக திருவண்ணா மலை வந்து ரமண மகரிஷி யையும் தரிசித்து, ஒரு குடுகுடுப்பைக்காரன் போன்ற தோற்றத்தில்- இறையருள் பெற்று மற்றவர்க்கும் அருளிய வர் யோகி ராம்சுரத் குமார்.
அண்ணாமலை ஈர்த்த யோகியர் அனேகம்பேர். 
அங்குள்ள செடி, கொடி, மரம், விலங்குகள், பறவைகள் யாவுமே சித்தர்கள் என்று ரமண மகரிஷி கூறியிருக்கிறார். 
ஞானக்கண்ணுள்ளோருக்கு இன்றைக்கும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கிறதாம்.
கார்த்திகை தீபத்திருநாளில் அண்ணாமலையை நினைப் போம்; அரனருள் பெறுவோம்!

No comments:

Post a Comment